தட்டான்குட்டை ஊராட்சியில் கிராம சபா கூட்டம், காத்திருப்பு போரட்டம்
குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி அலுவலகம் முன்பு ஊராட்சி மன்ற உறுப்பினர் கதிரேசன் மற்றும் பலர் காத்திருப்பு போராட்டம் துவங்கினர்.
குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சியில் கிராம சபா கூட்டம் ஊராட்சி தலைவி புஷ்பா தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு கோரிக்கைகளை பொதுமக்கள் விடுத்தனர். அவைகள் விரைவில் சரி செய்யப்படும் என தலைவி புஷ்பா கூறினார்.
நல்லாம்பாளையம் பகுதியில் தனியாருக்கு பிளாட் அமைக்க முறைகேடாக அனுமதி வழங்கியதாகவும், அதனை ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும், ஊராட்சி மன்ற உறுப்பினர் கதிரேசன், கொங்குநாடு வேட்டுவ கவுண்டர் இளைஞர் நல சங்க நிர்வாகி விஜயகுமார் உள்ளிட்ட பலர் கோரிக்கை விடுத்தனர்.
ஆனால் தீர்மானம் நிறைவேற்ற ஊராட்சி நிர்வாகத்தால் மறுக்கப்பட்டது. இதனால் ஊராட்சி மன்ற உறுப்பினர் கதிரேசன் உள்ளிட்ட பலர் பூட்டப்பட்ட ஊராட்சி அலுவலகம் முன்பு கோரிக்கை நிறைவேற்ற கோரி காலவரையற்ற காத்திருப்பு போராட்டம் துவங்கினார்கள். அங்கேயே சமையலும் செய்யப்பட்டது.
மரங்கள் அகற்ற கோரிக்கை
குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி, வீரப்பம்பாளையம் பகுதியில் மேட்டூர் கிழக்குக்கரை வாய்க்கால் உள்ளது. இங்கு வாய்க்கால் கரைகளில் உள்ள பல மரங்கள் வாய்க்காலில் சாய்ந்து எந்நேரமும் வாய்க்காலில் விழும் நிலையில் உள்ளது. இதன் கிளைகள் தண்ணீரில் மூழ்கி இருப்பதால், தண்ணீரில் அடித்து வரப்படும் பிளாஸ்டிக் கழிவுகள், துணிமணிகள், காகிதங்கள், உள்ளிட்ட குப்பைகள் தேங்குவதால் துர்நாற்றம் வீசும் நிலையில், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
இதனால் பல விஷ ஜந்துக்களும் மரத்தின் கிளைகளில் ஏறி, வாய்க்கால் கரைகளில் உள்ள வீடுகளுக்கு புகும் நிலையும், அபாயமும் ஏற்பட்டு வருகிறது. அசம்பாவிதம் ஏற்படும் முன் இந்த மரக்கிளைகளை வெட்டி விடவும், சாயும் நிலையில் உள்ள மரங்களை அகற்றவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போராட்டம் நடத்த போலீஸ் அனுமதி மறுப்பு
குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி, நல்லாம்பாளையம் பகுதியில் தனியார் நிறுவனத்தால் ரியல் எஸ்டேட் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முறையற்ற முறையில் அனுமதி வழங்கியதாக ஊராட்சி தலைவரை கண்டித்து, ஊராட்சி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடத்த போலீசாரிடம் 9வது வார்டு, வீ. மேட்டூரை சேர்ந்த கதிரேசன் அனுமதி கேட்டார். அதற்கு குமாரபாளையம் போலீசார் அனுமதி மறுத்தனர்.
இது குறித்து கதிரேசன் கூறுகையில், குறிப்பிட்ட பகுதியில் விவசாய நிலத்தில் டி.டி.சி.பி. உரிமம் வழங்கப்பட்டும், ரியல் எஸ்டேட் அமைக்க ஊராட்சி, பி.டி.ஓ. அலுவலக அதிகாரிகள் அனுமதி கொடுத்துள்ளனர். விவசாயத்தை பாதுக்காக்க வேண்டி, முறையற்ற முறையில் கொடுக்கப்பட்ட அனைத்து உரிமங்களை ரத்து செய்திட வேண்டி, ஊராட்சி அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்த போலீசில் அனுமதி கேட்டேன். போலீசார் அனுமதி மறுத்தனர். இது குறித்து மாவட்ட போலீஸ் எஸ்.பி, மாவட்ட கலெக்டரிடம் அனுமதி பெற்று போராட்டம் நடத்த உள்ளேன் எனக் கூறினார்.
குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி, கல்லங்காட்டுவலசு, வீரப்பம்பாளையம் அருந்ததியர் காலனியில் வசிக்கும் மக்கள், யாராவது இறந்தால், அவரை தகனம் செய்ய சடலத்தை கொண்டு செல்ல வழியில்லாமல், சடலத்தை சுமந்தவாறு வாய்க்கால் நீரில் நடந்தும், கள் செடிகள் மத்தியிலும் கொண்டு செல்லும் நிலை இருந்து வந்தது. மானம் செல்லும் பாதையில் உள்ள நில உரிமையாளர்கள் மயான வழிக்கு இடம் கொடுக்க முன்வராததே காரணம். 10 ஆண்டுகள் அமைச்சராக தங்கமணி இருந்த போதும் இதற்கு தீர்வு காண முடியவில்லை. தற்போது அந்த வழித்தடத்தின் உரிமையாளர் ஒருவர் இறந்ததால், அவரது மருமகன் பாரிவள்ளல் என்பவரும், இதே வழியில் உள்ள அருவங்காடு ஆறுமுகம் என்பவரும் வழி விட சம்மதம் தெரிவித்தனர். இதற்கான முயற்சியில் முன்னாள் ஊராட்சி தலைவர் செல்லமுத்து ஈடுபட்டார். இதனால் இந்த வழித்தடத்தை பொதுமக்களுக்கு ஒப்படைக்கும் நிகழ்வு, விழாவாக நடைபெற்றது. ஊராட்சி தலைவி புஷ்பா தலைமை வகித்தார்.
இதில் பங்கேற்று முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசுகையில், இந்த மயான வழித்தட பிரச்னை தீராத பிரச்சனையாக இருந்தது. இதற்கு முயற்சி எடுத்து வெற்றி பெற செய்த செல்லமுத்து, அவருடன் பாடுபட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள். இடம் கொடுத்து உதவிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி.
10 ஆண்டு காலம் சட்டத்தின் ஆட்சி நடத்தினோம். ஒரு திட்டத்தை கூட கொண்டு வராமல் எங்கே பார்த்தாலும் பிராந்தி. தி.மு.க. ஆட்சி சரியில்லை என்று தி.மு.க.வினர் சொல்கிறார்கள் அரசு ஊழியர்கள் எப்போதும் தி.மு.க.விற்கு அதரவாக இருப்பார்கள். அந்த அரசு ஊழியர்களையும் ஏமாற்றி விட்டார்கள். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் நாம் நாற்பது தொகுதியில் வெற்றி பெற போகின்றோம். 400 கோடியில் கிராமப்புற பகுதியில் குடிநீர் வழங்க திட்டம் துவங்கி நாங்கள் 90 சதவீதம் பணியை முடித்து விட்டு சென்றோம் எனப் பேசினார்.
குமாரபாளையம் அருகே கல்லங்காட்டுவலசு பகுதியில் கொங்கம் பொதுநல அமைப்பின் சார்பில் அரசு பள்ளிகளை சேர்ந்த 105 மாணவ, மாணவியர்களுக்கு இலவசமாக சிலம்ப பயிற்சி வழங்கப்பட்டது. இதன் 2ம் ஆண்டு தொடக்க விழா அமைப்பாளர் கதிரேசன் தலைமையில் நடைபெற்றது. நிர்வாகிகள் சமர்ப்பா குமரன், ஜீவா நிகழ்சிகளை தொகுத்து வழங்கினர். பயிற்சியாளர் ஜெகதீசன் பயிற்சி வழங்கினார். இதில் பங்கேற்ற மாணவ,மாணவியர்களுக்கு சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்ற தட்டான்குட்டை ஊராட்சி தலைவி புஷ்பா, ஏலந்தகுட்டை ஊராட்சி தலைவர் வெங்கடாசலம், தட்டான்குட்டை ஊராட்சி முன்னாள் தலைவர் காந்தி நாச்சிமுத்து உள்ளிட்ட பலர் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தி பேசினார்கள். பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu