தடை தகர்ந்தது… வெளியாகிறது 'வெந்து தணிந்தது காடு'..!

தடை தகர்ந்தது… வெளியாகிறது வெந்து தணிந்தது காடு..!
X

பைல் படம்.

Vendhu Thanindhathu Kaadu -நடிகர் சிலம்பரசன் நாயகனாக நடித்துள்ள 'வெந்து தணிந்தது காடு' தடை ஏதும் இன்றி வெளியாகிறது.

Vendhu Thanindhathu Kaadu -இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் நாயகனாக நடித்துள்ள ' வெந்து தணிந்தது காடு' படம் இன்று வெளிவர உள்ள நிலையில், இப்படத்துக்கு தடை விதிக்க வேண்டி மனுத் தாக்கல் செய்து, ஆன் இன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டிருந்தது.

அவ்வழக்கில் தாக்கல் செய்த மனுவில், "2018-ம் ஆண்டு நடிகர் சிலம்பரசன் நடிப்பில், 'சூப்பர் ஸ்டார்' என்ற பெயரில் ஒரு படத்தை இயக்குவதற்காக இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனுடன் ஓர் ஒப்பந்தம் போடப்பட்டது. இதற்கான முன்பணமாக இரண்டு கோடியே நாற்பது லட்ச ரூபாய் முன்பணமாகக் கொடுக்கப்பட்டது.

இந்தநிலையில், எங்களிடம் கூறிய அதே கதையை வைத்துத்தான் இன்று வெளியாகவிருக்கும் 'வெந்து தணிந்தது காடு' படத்தை எடுத்துள்ளனர். எனவே, எங்களுக்குத் தர வேண்டிய இரண்டு கோடியே நாற்பது லட்ச ரூபாய் முன் பணத்தைத் திருப்பித் தராமல் படத்தை வெளியிடக்கூடாது. அப்படம் வெளியிட தடை விதிக்க வேண்டும்" என கூறப்பட்டிருந்தது.

இந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "2018-ம் ஆண்டு ஒப்பந்தத்தை மீறி எடுக்கப்பட்ட இந்தப் படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும்" என கோரிக்கை வைத்தார்.

இதற்கு கௌதம் வாசுதேவ் மேனன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "ஒப்பந்தம் செய்யப்பட்டது என்பது உண்மைதான். அடுத்த படத்தை இயக்குவதற்கு முன்பாக மனுதாரருக்கு கொடுக்க வேண்டிய பணத்தைத் திருப்பிக் கொடுத்து விடுகிறோம். இது சம்பந்தமாக மனுதாரருடன் நாங்கள் சமரசம் செய்து கொள்கிறோம்" என்று பதில் வாதத்தை முன் வைத்தார்.

இந்நிலையில், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் தரப்பின் சமரசத்தை ஏற்று மனுதாரர் சம்மதம் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, மனுதாரரின் பணத்தை திருப்பிக் கொடுப்பது தொடர்பான உத்தரவாதத்தை பதில் மனுவாகத் தாக்கல் செய்யும்படி, இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி, இந்த மனுமீதான விசாரணையை செப்டம்பர் 21-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இந்தநிலையில், 'வெந்து தணிந்தது காடு' படத்துக்கு எந்தத் தடையும் விதிக்கப்படாததால், திட்டமிட்டபடி இன்று திரையரங்குகளில் படம் வெளியாக உள்ளது. எனவே, சிலம்பரசனின் ரசிகர்கள் கொண்டாட்டத்துக்கு தயாராக உள்ளனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
Sudden Halt in Pongal Package Distribution at Erode East Ration Shops..!